இவ்வறிவிக்கைக்கு உட்பட்ட அனைத்து திட்டங்களும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற பின்வரும் முறைப்படி பரிசீலனை செய்யப்படும். அவை
I. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை நாடும் திட்ட முன்மொழிவாளர்கள் குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் பின்வரும் ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- 1) படிவம் – 1 ( அறிவிக்கையின் பின்னிணைப்பு - IV)
- 2) 4(c) and (d) க்கு கீழ் பட்டியலிடப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் தவிர்த்த கடல் மற்றும் நிலக் கூறுகள் உள்ளிட்ட விரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை.
- 3) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வகைப்படுத்தப்பட்ட குறைந்த மற்றும் மிதமான கடலரிப்பு பகுதிகள் குறித்த ஒட்டுமொத்த ஆய்வுகளின் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் ஆலோசனை.
- 4) பேரிடர் மேலாண்மை அறிக்கை, அபாய மதிப்பீட்டு அறிக்கை மற்றும் மேலாண்மைத் திட்டம்.
- 5) 1:4000 அளவீட்டில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வரையறுக்கப்பட்ட உயர் அலைக் கோடு மற்றும் குறைந்த அலைக் கோடுகளைக் குறிக்கும் கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் ( சென்னை அண்ணா பல்க்கலைக்கழகத்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட முகைமைகளாகும்).
- 6) மேற்கூறிய வரைபடத்தின் மீது பதிக்கப்பட்ட திட்ட வரைபடம்
- 7) திட்டபணி மேற்கொள்ளவிருக்கும் இடத்தைச் சுற்றி 7கிமீ சுற்றளவிற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம்.
- 8) கடலோர ஒழுங்குமுறை மண்டலங்கள் - I, II, III மற்றும் IV உட்பட குறிப்பிட்ட சூழலியல் உணர்திறன் பகுதிளை குறிக்கக்கூடிய கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம்.
II. கழிவுநீர், திடக் கழிவுகள் போன்றவற்றை வெளியிடக்கூடிய திட்டங்களுக்கு சென்னை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
III. விண்ணப்பதாரர் மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையம் விண்ணப்பத்தின் மீது திருப்தியடைந்தால், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்யும்.
IV. மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் சரிபார்க்கப்படும். இவ்விண்ணப்பங்கள் மீது திருப்தி ஏற்பட்டால், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் திட்ட முன்மொழிவாளருக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிக்கு பரிவேஷ் 2.0 வலைதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பும்.
V. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மேற்கூறிய ஆவணங்களை அங்கீகரிக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை திட்டம் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையுடன் சரிபார்த்து, முழுமையான விண்ணப்பத்தைப் பெற்றக்கொண்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும்.
VI. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், தொழில்நுட்ப ஆய்வுக் குழுவால் அவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பொருட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். அதில் திட்ட முன்மொழிவாளர்கள் திட்டம் குறித்த விரிவான விளக்கங்களை அளித்து கருத்துக்களைப் பதிவு செய்வர்.
VII. தொழில்நுட்பக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, இக்கூட்டத்தில் திட்ட முன்மொழிவாளர்கள் இத்திட்டம் குறித்த விரிவான விளக்கங்களை இக்கூட்டத்தின் போது அளிக்க வேண்டும்.
VIII. இத்திட்டத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையமானது திட்டத்தினைப் பொறுத்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம்/ மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்/உள்ளாட்சி திட்ட அமைப்புகள் ஆகியவற்றிடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிக்காகப் பரிந்துரை செய்யும்.
IX. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட தேதியிலிருந்து பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும்.